விளையாட்டாய் சில கதைகள்: உலகக் கோப்பையை தவறவிட்ட இந்தியா

2003-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று, கோப்பையை இழந்த நாள் மார்ச் 23.

1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அதற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இந்த சூழலில்தான் 2003-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சவுரவ் கங்குலி தலைமையில் சச்சின், திராவிட், சேவாக், யுவராஜ் சிங் என்று வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணி அனுப்பப்பட்டது.

இத்தொடரின் முதல் போட்டியில், கத்துக்குட்டிகளான நெதர்லாந்து அணியிடம் திக்கித் திணறி வென்றது இந்தியா. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் அடுத்த 4 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் விஸ்வரூபம் எடுக்க (அடுத்த 4 இன்னிங்ஸ்களில் 81, 152, 50, 98 என ரன்களைக் குவித்தார்) சூப்பர் சிக்ஸ் சுற்று, அரையிறுதிச் சுற்று ஆகியவற்றில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்ததால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆட்டம் அவர்களின் நம்பிக்கையைத் தகர்த்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, ரிக்கி பாண்டிங் (140 ரன்கள்), டெமின் மார்ட்டின் (88 ரன்கள்) ஆகியோரின் பேட்டிங்கால் 359 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் சேவக் மட்டும் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து 82 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், 234 ரன்களில் சுருண்ட இந்தியா கோப்பையைத் தவற விட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே