மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம்..!!

மகாசிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவாலயங்களை பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி களைகட்டியுள்ளது. எங்கும் கோவிந்தா… கோபாலா முழக்கம் எதிரொலிக்கிறது.

சிவபெருமான் அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினமே மகா சிவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட சிவபெருமானின் பஞ்சசபைகளிலும், பஞ்சபூதத்தலங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை வழிபாடு செய்து வருகின்றனர்.

சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலையில் 12 சிவாலயங்களை, ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓடி வருகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அனைத்து பக்தர்களும், மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் தேய்பிறை ஏகாதசிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தங்களுடைய விரதத்தை தொடங்கிவிடுகின்றனர்.

விரத நாட்களில் காலை முதல் மாலை வரை இளநீர் மற்றும் நுங்கு ஆகியவற்றையும், இரவு வேளையில் துளசி இலையும், துளசி தீர்த்தமும் அருந்துகின்றனர்.

சபரிமலைக்கு செல்பவர்களுக்கு எப்படி ஒரு குருசாமி வழிநடத்திச் செல்வாரோ, அது போலவே, சிவாலய ஓட்டத்திலும் ஒரு குருசாமி வழி நடத்திச் செல்கிறார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறியும், திருநீறு பை சகிதமாக சிவராத்திரிக்கு முந்தைய தினம் நேற்று புதன்கிழமை முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டத்தை தொடங்கினர்.

சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலையில் 12 சிவாலயங்களை, ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓடி வருகின்றனர்.

தொடர்ந்து திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை சிவன் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்றிபாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் ஆகிய கோயில்களை ஓடியே சென்று வணங்குவர்.

மகாசிவராத்திரி நாளில் கடைசியாக 12வது கோயிலான நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சிவாலய ஓட்டம் இன்று நிறைவுபெறும். வயது முதிர்ந்தோரும், இயலாதவர்களும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்று வழிபடுவதும் உண்டு. சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே