அஜித்துக்கு அப்புறம் சிவகார்த்திகேயன் – கவனம் பெறும் கலெக்டரின் பதிவு.

சிவகார்த்திகேயன் படத்தை பயன்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்திருக்கும் மாவட்ட ஆட்சியரின் பதிவு கவனம் பெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகிறது தேர்தல் ஆணையம். இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படத்தை பயன்படுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு பிரசார போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

‘வலிமை’ படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அந்தப் படத்தின் அப்டேட் என்று கூறி ட்வீட் செய்திருந்த மாவட்ட ஆட்சியரின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அப்டேட் என்று கூறி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் சிவகார்த்திகேயன், “முகக்கவசம் அணிந்து வாக்களிக்க வாருங்கள் – டாக்டர்” என்று குறிப்பிட்டுள்ளார். அதில் சிவகார்த்திகேயன் முகக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு போஸ்டர் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

இதைப்பார்த்த சிவகார்த்திகேயன், “உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான ஒரு செயல். இதில் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்” என்று மாவட்ட ஆட்சியரின் ட்வீட்டை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார்.

சிவகார்த்திகேயனின் பதிவுக்கு பதிலளித்த ஆட்சியர் விஜயகார்த்திகேயன், “அதான் டாக்டரே சொல்லிட்டாரே. நாம் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்வோம்” என்று கூறியுள்ளார். இந்த இருவரது ட்விட்டர் உரையாடல் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

முன்னதாக மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘டாக்டர்’ திரைப்படம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு ரம்ஜானுக்கு மாற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே