பாஜகவில் இணைந்தார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்..!!

பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.

`தமிழக பா.ஜ.க-வில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் இணையப் போகிறார்’ என்ற தகவல் பரவியதும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி தென்பட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலைப் பிரிவுத் தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்.

அதில், ` நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் ராம்குமார், பா.ஜ.கவில் இணையவிருப்பதாக வெளியான தகவல்களை அறிந்து வேதனையும் வருத்தமும் அடைந்தேன்.

ஒவ்வொருவருக்கும் ஓர் அரசியல் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிடும் உரிமை உண்டு என்றாலும்; இப்போது சிவாஜியின் புதல்வர் சேரவிருப்பது பா.ஜ.கவில் என்பதுதான் முரண்பாடான விஷயமாக இருக்கிறது.

ஏனெனில், சிவாஜி என்றுமே தேசிய உணர்வோடு மதச்சார்பற்ற தலைவராகவும் திகழ்ந்தவர் என்பது அவரோடு பழகிய, பயணித்த என்னைப் போன்றோருக்குத் தெரியும்.

`இந்திய நாடு என் வீடு ; இந்தியன் என்பது என்பேரு; எல்லா மதமும் என் மதமே, எதுவும் எனக்கு சம்மதமே’ என்பது அவரது படத்தின் பாடல் மட்டுமல்ல. அவருடைய உள்ளத்தின் வெளிப்பாடும் அதுவே.

காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளியேறியபோதும், ஏன் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தபோதும்கூட, காமராஜரின் பெயரை அவர் உச்சரிக்கத் தவறியதே இல்லை.

காங்கிரஸ் பேரியக்கத்தைப் பொருத்தவரை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டை, சச்சரவு போல அரசியலிலிருந்து சிவாஜி விலகியிருந்தாரே தவிர காங்கிரசின் கொள்கைகளிலிருந்து, காமராஜர் பற்றிலிருந்து என்றுமே விலகியதில்லை.

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என அனைத்து தலைவர்களின் அன்பையும் பெற்றிருந்தார்.

எனவே, பா.ஜ.க.வில் இணைவது என்ற ராம்குமாரின் முடிவு சிவாஜியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடியதாகத்தான் இருக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், தமிழக பா.ஜ.கவில் இணைவதற்காக புதன்கிழமை அன்று ராம்குமார் கமலாலயம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ` சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியை தழுவி இருந்தாலும் நான் மோதியின் ரசிகர் என்பதால் பா.ஜ.கவில் இணைகிறேன். இதனை கட்சித் தலைவரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாரபூர்வமாக தமிழக பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், “ தேசியமும் தெய்வீகமும் ஒன்று கலந்து மக்களுக்கு எடுத்துக் காட்டியவர் சிவாஜி கணேசன்.

அந்த சிந்தாந்தத்தை இந்த நாட்டில் முன்னின்று நடத்திக் கொண்டிருப்பவர் பிரதமர் மோதி.

அந்த வழியில் நானும் செல்கிறேன். பிரதமர் செல்கின்ற வழி எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அதனால் பாரதிய ஜனதாவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

பிரதமரின் கரத்தை வலுப்படுத்த நாமெல்லாம் ஒன்றாகச் சேருவோம்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “ நம் மக்கள் எல்லாம், `நாடு என்ன செய்தது நமக்கு?’ எனக் கேட்காமல் நீங்கள் நாட்டுக்குச் செய்தால் இந்த நாடு முன்னேறும்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் பிரதமர் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

மக்களின் நலனுக்காக அவர் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.

எங்கள் அப்பாவின் அரசியல் பாதை எப்படியிருந்தது என்று உங்களுக்கே தெரியும்.

நான் அவருக்காகத்தான் சிறிது காலம் ஒதுங்கியிருந்தேன்.

இப்போது என் வழி எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. இப்போது சிறிய அலையாக நாங்கள் சேர்ந்திருக்கிறோம்.

பல ஊர்களில் நிறைய பேர் பா.ஜ.கவில் சேர்ந்து வருகின்றனர்.

அந்த அலை சேர்ந்து கொண்டே இருக்கும் பா.ஜ.கவின் கரத்தை தமிழகத்தில் வலுப்படுத்துவோம்.

வரும் காலத்தில் தமிழகத்தில் தாமரை மலரும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே