அமெரிக்க தேர்தல் சூழ்நிலையை பீகாருடன் ஒப்பிட்டு பேசிய சிவசேனா கட்சி..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து இந்தியா ஏதேனும் பாடம் கற்றுக்கொண்டால் நல்லது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க அதிபராக இருக்க ட்ரம்ப் சற்றும் தகுதியுடையவராக இருந்ததில்லை. அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்து அவர்களுடைய தவற்றைத் திருத்திக் கொண்டுள்ளனர்.

4 வருடங்களில் ட்ரம்ப் ஒரே ஒரு வாக்குறுதியைக் கூட மக்களுக்காக நிறைவேற்றவில்லை. ட்ரம்ப்பின் தோல்வியிலிருந்து நாம் எதையாவது கற்றுக் கொள்வது உத்தமம்.

அமெரிக்காவில் கோவிட் 19 பிரச்சினையைவிடத் தலையாய பிரச்சினை வேலைவாய்ப்பின்மை. இதற்கு தீர்வு காணாமல் ட்ரம்ப் அரசியல் கேலிக்கூத்துகளில் கவனம் செலுத்திவந்தார்.

அமெரிக்காவின் ஆட்சி மாறிவிட்டது. இங்கே, பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிக்கு எதிராக உருவான அலை, நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியின் விளிம்பில் இருப்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

எங்களைத் தேர்வு செய்வதைத் தவிர தேசத்துக்கு வேறு வழியில்லை, மாநிலங்களில் மக்கள் எங்களுக்காக காத்திருக்கின்றனர் போன்று தலைவர்கள் உருவாக்கிவைத்துள்ள சில தோற்றப்பிழைகளை மக்கள் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு ட்ரம்ப்பின் தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே