குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்..!! இதற்கு தீர்வு என்ன..??

சிறு குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை என பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..

டெல்லியில் நிர்பயா, காஷ்மீரில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி.. சென்னையில் ஹாசினி என்ற 6 வயது சிறுமி.. பெங்களூருவில் திஷா என்ற கல்லூரி மாணவி, அரியலூரில் நந்தினி.. இந்த பெயர்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.. மேலே குறிப்பிட்ட அனைவரும், நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் கொலை செய்யப்பட்டவர்கள்.

இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்ததால் தெரிந்த சம்பவங்கள். ஆனால் வெளியில் வராத எத்தனையோ நிர்பயாக்களும், ஆசிஃபாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குறிப்பாக பொள்ளாச்சியில் கடந்த 6 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மிரட்டி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதே போல் நாகர்கோயிலை சேர்ந்த காசி என்ற காமுகன், பேஸ்புக் மூலம் காதலிப்பதாக கூறி நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கொடுமையையும் நாம் மறந்திருக்க மாட்டோம்..

ஆனால் தற்போது பள்ளி செல்லும் மாணவிகளுக்கு, ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது..

பிஎஸ்பிபி பள்ளி தொடங்கி, சுஷில் ஹரி பள்ளி, அண்மையில் கோவை சின்மயா பள்ளி என பல்வேறு பாலியல் தொல்லை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன..

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் தொல்லை இருப்பதாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்றும் அவர் எழுதிய உருக்கமான கடிதம் அனைவரையும் உலுக்கியது..

சரி.. பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், பாலியல் சீண்டல்கள் இப்போது தான் அதிகரித்துள்ளதா என்றால் இல்லை என்பதே பதில்.. இதற்கு முன்பு கூட நிறைய பாலியல் தொல்லை சம்பவங்கள் அரங்கேறி இருக்கலாம்.. ஆனால் அவை எல்லாமே வெளியில் வராமல் இருந்திருக்கலாம்..

ஏனெனில் பாலியல் தொந்தரவுகளால் ஒரு பெண் பாதிக்கப்பட்டால், அந்த குற்றத்தை செய்தவருக்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சொல்லும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. எனவே அதை வெளியில் சொல்லவே தயங்கினர்..

ஆனால் இப்போது தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பலரும் துணிச்சலாக வெளிப்படையாக வெளியில் சொல்ல தொடங்கி உள்ளனர்.. இது வரவேற்கத்தக்க ஒன்று என உளவியல் நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்..

பாலியல் அத்துமீறல்கள் குறித்தும், இதற்கு என்ன தான் தீர்வு, குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டும்..? என பல கேள்விகளுக்கு உளவியல் நிபுணர் ஸ்டெஃபி மணிகண்டன் பதிலளித்துள்ளார்..

இதுகுறித்து அவர் பிரத்யேக பேட்டியளித்தார்.. அப்போது, பாலியல் தொல்லைகள் ஏன் நடக்கிறது என்பதற்கு விளக்கமளித்த அவர் , யாரெல்லாம் சிறு வயதில் பாலியல் ரீதியான அடக்குமுறைகளை எதிர்கொள்கிறார்களோ, அவர்கள் தான் பின்னாளில் வளர்ந்த பிறகு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்..

பாலியல் தொந்தரவில் ஈடுபடும் நபர்களை குற்றவாளிகளாக பார்க்காமல், அவர்களை மன நோயாளியாக பார்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு இருப்பது மனநோய் என்றும் கூறுகிறார்..

பெண் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch ஆகியவை குறித்து பெற்றோர் சொல்லிக் கொடுத்தாலும் கூட, இன்னமும் கூட பல பெற்றோர்களுக்கு பாலியல் உறவு குறித்து பிள்ளைகளிடம் பேச தயக்கம் இருக்கிறது என்று கூறிய அவர், பெற்றோர்களிடம் இருக்கும் தயக்கம் போனாலே குழந்தைகளுக்கு எளிதாக புரியவைத்துவிடலாம் என்றும் சொல்கிறார்..

ஆசிரியர்கள் ஏன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்கின்றனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஒருவர் பார்க்கும் வேலைக்கும் அவரின் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார்..

மேலும் “ ஆசிரியர் என்பது அவர் பார்க்கும் வேலை தான்.. அதன் பின்னால் அவரும் மனிதர் தான்.. ஒட்டுமொத்தமாக பாலியல் உறவு குறித்த எண்ணம் மாற வேண்டும்” என்று கூறுகிறார்..

பாலியல் உறவு குறித்து சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவருக்குமே இந்த விழிப்புணர்வு வந்தால் தான் இவை எல்லாம் மாறும் என்று கூறுகிறார்…

ஆனால் அதே நேரத்தில் பெற்றொர்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் சுட்டிகாட்டிய ஸ்டெஃபி, குழந்தைகள் பாலியல் தொந்தரவு குறித்து ஏதேனும் சொன்னால் அதை முதலில் பெற்றோர் நம்ப வேண்டும் என்று சொல்கிறார்..

நீ பொய் சொல்ற.. ஒரு ஆசிரியர் இப்படி பண்ணுவாரா என்று குழந்தையிடம் கேட்டால் அந்த குழந்தையின் நம்பிக்கையே உடைந்துவிடும்.. எனவே தனக்கு எது நடந்தாலும் அந்த குழந்தை யாரிடமும் சொல்லாது என்பதால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறுகிறார்..

எனவே குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை பெற்றோரிடம் தைரியமாக சொல்லும் அளவுக்கு சிறு வயதில் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்..

இதே போல் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பேச வேண்டும் என்றும், “ நீ எந்த தப்பும் பண்ணல.. உனக்கு ஒரு தப்பு நடந்திருக்கு, இனிமே நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்..

மேலும் பள்ளிகளுக்கான விதிகளை அரசாங்கமும் மறு ஆய்வு செய்து, விதிகளை மாற்ற வேண்டும் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக அந்தந்த பள்ளி நிர்வாகமும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறார்..

ஒருவர் மாறுவதால் இது மாறப்போறதில்லை என்றும் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே அடுத்த மாற்றம் நடக்கும், அந்த மாற்றம் நடந்து வருவதாகவும் சொல்கிறார்..

பாலியல் குற்றவாளிகளை தவறானவர்கள் என்று கூறுவதால் மட்டும் இந்த பிரச்சனை முடிவுக்கு வராது என்றும் கடுமையான தண்டனை, தூக்கு தண்டனை போன்றவை தீர்வு கிடையாது என்றும் கூறுகிறார்..

நோயாளியாக அவர்களை பார்த்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்காத வரைக்கும் இந்த பாலியல் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று சொல்கிறார்.. பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கொடுப்பதை விட அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்கள் நல்ல வாழ்க்கையை வாழ உதவி செய்யலாம் என்று கூறி முடித்தார்..

இந்தியா போன்ற நீண்ட நெடிய பாரம்பரியம், கலாச்சார பின்புலம் கொண்ட நாட்டில், அதுவும் பெண்களை தெய்வமாக போற்றும் அதே நேரத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், அநீதிகளும் அதிகம் நிகழ்கின்றன என்பது தான் கசப்பான உண்மை…

இங்கு ஆண்பிள்ளைகள் வளர்க்கப்படும் முறை தான் பெண்கள் மீதான வன்முறைக்கும், பெண்ணை ஒரு பாலியல் பொம்மையாக மட்டுமே பார்க்கப்படுவதற்கும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது..

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நிறைய விதிகள் உள்ளன.. ஆனால், பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால், அவர்களுக்கு பாதுக்காப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்று எந்த ஆண்குழந்தைக்கும் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.

ஒரு ஆண் தன் தாயை, சகோதரியை எப்படி பார்க்கிறானோ, மற்ற பெண்களையும் அதே போல் பார்க்காவிட்டாலும், அவர்களை ஒரு சக மனிதியாக பார்த்தாலே போதும் பெரும்பாலான குற்றங்கள் குறைந்துவிடும்.

இன்னும் எத்தனை காலத்திற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண் குழந்தைகளுக்கு மட்டும் சொல்லிக் கொடுப்பது..? இனிமேலாவது பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆண்களுக்கும் சொல்லிக்கொடுப்போம்..

ஸ்டெஃபி கூறியது போல இங்கு ஒரு சிலர் மாறினால் மட்டும் போதாது.. ஒவ்வொருவரும் மாற வேண்டும்.. அது நடந்தால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்… அந்த மாற்றம் விரைவில் ஏற்படும் என்று நாமும் நம்புவோம்..

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே