தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தருமபுரியில் தெரிவித்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி தருமபுரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று (அக். 14) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு தொடர் அங்கீகார ஆணைகளை பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கினர்.

பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

“தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லாததாக உள்ளது. ஆந்திராவில் பள்ளிகளை திறந்த போது கரோனா தொற்று வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பாதுகாப்பு இல்லாதது. கரோனா தொற்று பரவல் ஓயும் வரை பள்ளிகளை திறக்க சாத்தியமில்லை.

இருப்பினும், அரசு துறைகள் சார்பில் குழு அமைக்கப்பட்டு, சூழலுக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார்”.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே