SBI வங்கியில் மோசடி – 147 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

கடந்த 5 மாதங்களில் மட்டும், வங்கி மோசடி வழக்குகளில் தொடர்புடைய 147 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியில் மோசடி செய்தோர் மீதான நடவடிக்கை குறித்து புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான விஹார் துர்வே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ-யிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த எஸ்.பி.ஐ. வங்கி, மோசடி செய்த 147 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விடக் கூடாது என்பதற்காக, இந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி, ஆகஸ்ட் வரை அவர்களுக்கு எதிராக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு குடியேற்றத் துறைக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக கூறியுள்ளது.

மத்திய அரசின் துணை செயலாளர், மாநில அரசின் இணை செயலாளர், நீதித்துறை நடுவர், எஸ்.பி. அளவிலான காவல் அதிகாரிகள், போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு மட்டுமே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் இருந்து வந்தது.

அந்த அதிகாரத்தை, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் மேலாண் இயக்குநர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி உள்துறை அமைச்சகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வங்கி மோசடியில் ஈடுபட்ட 49 பொருளாதார குற்றவாளிகள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டதாக கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே