தமிழகத்தில் சனி, ஞாயிறு ஊரடங்கு..?? தலைமை செயலாளர் ஆலோசனை..!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலையின் போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்ததே இல்லை.

ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

நேற்று ஒரு நாளில் 7,987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிவேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வண்ணம், கடந்த 8ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. அவற்றை முறையாக பின்பற்ற வேண்டுமென எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு, பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதற்கான நடவடிக்கைகளிலும் அதிரடியாக களமிறங்கியிருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கூடுதலாக கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தின் முடிவில் இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே