சாத்தான்குளம் கொலை : கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதில் கடந்த வாரம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

காவலர் முத்துராஜை சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இறப்பதற்கு முன்பு ஜூன் 20-ம் தேதி அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச் சிறைக்கு கடந்த 18-ம் தேதி சிபிஐ ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தந்தை, மகன் இறப்பதற்கு முன் சிகிச்சை பெற்ற கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேர் இன்று மாலை 4.20 மணிக்கு வந்தனர்.

அவர்கள் பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன், பணியில் இருந்த செவிலியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், கிளைச் சிறைக்கு சென்று கைதிகளின் உடல்நிலையை பரிசோதித்த அரசு மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் தந்தை, மகன் இருவரும் சிறையில் இருந்தபோது காயத்துடன் இருந்தனரா, ரத்தக்காயம் இருந்ததா, உடல்நிலை பாதிக்கப்பட்டு கடைசியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர்களது மனநிலை என்னவாக இருந்தது என்பது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், இறப்புக்குப் பின்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே