தஞ்சாவூரில் சாமி தரிசனம் செய்த சசிகலா..!!

சென்னையில் இருந்து திடீரெனத் தஞ்சாவூர் வந்துள்ள சசிகலா, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ரேவதி நட்சத்திர லிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா அண்மையில் விடுதலையானார்.

பெங்களூருவில் இருந்து வந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த சசிகலா, பின்னர் திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள உறவினர் இளவரசியின் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் சென்னையிலிருந்து நேற்று மாலை திடீரெனப் புறப்பட்ட சசிகலா, நேற்று நள்ளிரவு தஞ்சாவூருக்கு வருகை தந்தார். 

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிய சசிகலா, இன்று (18-ம் தேதி) காலை தனது கணவரின் சொந்த ஊரான விளாருக்குச் சென்றார்.

விளாரில் நடராஜனின் சகோதரர் பழனிவேலுவின் பேரக் குழந்தைகளுக்கு இன்று, அவர்களது குல தெய்வக் கோயிலான வீரனார் கோயிலில் காது குத்து விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சசிகலா, சில நிமிடங்கள் மட்டுமே உறவினர்களுடன் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்குச் சசிகலா வருகை தந்தார்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்கங்களுக்குச் சன்னதி கொண்ட தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் விளங்கி வருகிறது.

இன்று காலை 11 மணிக்கு மகாலிங்கசுவாமி கோயிலுக்கு வருகை தந்த சசிகலாவுக்கு, கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பளித்தனர்.

விநாயகரை வழிபட்டு பின்னர் கோயிலுக்குள் வந்த சசிகலா, 27நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்துக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார்.

தொடர்ந்து மகாலிங்கசுவாமி, சுந்தர குஜாம்பாள், மூகாம்பிகை அம்பாள் சன்னதிக்குச் சென்று வழிபட்டார்.

சுமார் 1 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்த சசிகலா, பின்னர் கோயிலுக்கு வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் குடைகளையும் வழங்கினார்.

தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள குலதெய்வமான வீரனார் கோயிலில் வழிபட்ட சசிகலா.

அப்போது செய்தியாளர்கள் பேச முயன்றபோது, கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன் என கூறிவிட்டு, காரில் ஏறிச் சென்றார்.

வரும் 20-ம் தேதி நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, விளாரில் உள்ள அவரது சமாதியில் நடைபெறவுள்ளது.

சசிகலா இதில் கலந்து கொண்டபின் சென்னை திரும்ப உள்ளார்.

தஞ்சாவூரில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் சசிலா, பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யவும், பல அரசியல் பிரமுகர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவும் உள்ளதாக சசிகலாவின் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே