தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: புதுவை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் எவ்விதத் தயக்கமும் இன்றி கரோனா தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் சுதந்திர இந்தியாவின் வைர விழா புகைப்படக் கண்காட்சி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் இன்று (மார்ச் 19) தொடங்கியது.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இதில் அகிம்சை எனும் ஆயுதம், நாட்டின் வீர புதல்வன், ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் ஆகிய தலைப்புகளில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் பட்டேல் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சியில் புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த புகைப்படங்களும் இடம் பெறச் செய்யுமாறு அதிகாரிகளிடம் ஆளுநர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, செயிண்ட் லூயி சாலையில் உள்ள அருங்காட்சியகத்துக்கும், கடற்கரைச் சாலையில் கட்டப்பட்டுள்ள மேரி கட்டிடத்துக்கும் சென்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளின்போது தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘கரோனா தொற்றுக்கு மிகுந்த பயம் வேண்டாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பக்கத்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நேற்று அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எப்படித் தீவிரப்படுத்துவது என்று ஆலோசித்தேன்.

60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 45 வயதுக்கு மேல் தொடர் நோய் உள்ளவர்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பலர் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். எனவே, ‘மாஸ்க் புதுச்சேரி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து அனைவரும் முகக்கவசம் அணிவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பொதுமக்கள் கலைப்பட வேண்டாம். பள்ளிகள் இயங்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கை இல்லையென்றால் விடுமுறை அளிக்கலாமா? என்ற யோசனை நேற்று வைக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன். அவசியம் என்றால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்.

தடுப்பூசி போடப்படும் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் இருப்பதாகத் தெரிவித்தால், அவை உடனே சரி செய்யப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் எவ்விதத் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தயவுசெய்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரது கையிலும் சானிடைசர் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே