முதல்வர், துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறது. அதனால் அதிமுகவில் யாராலும் எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அதிமுகவில் யாராலும், எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
விளாத்திகுளத்தில் உள்ள நல்லப்ப சுவாமிகள் நினைவிடத்தில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி ரூ.24 லட்சம் செலவில் இசை பயில்வதற்கான இசைப்பள்ளி கட்டடப்பணி தொடக்க விழா இன்று நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு இசை பள்ளி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து புதூர் ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் மாணவர் விடுதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் எட்டயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 97 பேருக்கு ரூ.40 லட்சம் கடன் உதவிகள் மற்றும் 17 பேருக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் கறவை மாடுகளையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் ராஜ்குமார், அழகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 28 சதவீதம் என ஜி.எஸ்.டி. வரி இருந்தது.
இதனை முதல்வரின் அறிவுரையின்பேரில் அமைச்சர் ஜெயக்குமார் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று கருத்தை அழுத்தமாக தெரிவித்து, இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள திரையங்குகளுக்கு ரூ.100 வரை 18 சதவீத ஜி.எஸ்.டி.யும், அதற்கு மேல் உள்ள தொகைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.யும் என இரட்டை வரியை பெற்று தந்துள்ளோம்.
கரோனா காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு திரையரங்குகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்தால் அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது.
முதல்வர், துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறது. அதிமுகவில் யாராலும் எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
அரியர்ஸ் தேர்வை பொருத்தவரை அரசு எடுத்த முடிவை மக்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.
இது மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. ஏ.ஐ.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்த்து வழக்குக்கு செல்வபவர்கள் மாணவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற கருத்தை தான் எங்களால் சொல்ல முடியும், என்றார்” அவர்.