அமேசான் பிரைமில் வெளியாகி பாசிட்டிவ் ரிவ்யுகளை பெற்று வரும் சர்பேட்டா பரம்பரை படம் திமுக, காங்கிரஸ், அதிமுக, எமர்ஜென்சி காலம் என்று பல அரசியல் நிகழ்வுகளை வெளிப்படையாக பேசி இருக்கிறது.

பரம்பரை பரம்பரையாக இருக்கும் மோதல்.. தனிப்பட்ட விரோதம்.. பாக்சிங் மீதான காதல்.. வடசென்னை அரசியல் என்று பல்வேறு புள்ளிகளை தொட்டு தரமான திரைக்கதையுடன் வெளியாகி இருக்கிறது சர்பேட்டா பரம்பரை. இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று இரவு அமேசான் பிரைமில் சர்பேட்டா பரம்பரை படம் வெளியானது.

நடிகர் ஆர்யாவிற்கு கம்பேக் கொடுக்கும் வகையில் மிக வலுவான வடசென்னை “பாக்சிங் ஹிஸ்டரி” குறித்து இந்த படம் பேசுகிறது. வடசென்னையில் பிரிட்டிஷார் காலத்தில் இருந்து 90களின் இறுதிவரை துடிப்பாக இருந்த பாக்சிங் கலாச்சாரத்தை அப்படியே அணு அணுவாக செதுக்கி அப்போது நடந்த அரசியல் பிரச்சனைகளை பாக்சிங்கிற்கு இடையில் வெளிப்படையாக காட்டி பா.ரஞ்சித் இந்த படத்தில் புதிய உயரத்தை தொட்டு இருக்கிறார்.
வடசென்னை

பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு சென்ற போது அவர்களிடம் இருந்து சென்னை இரண்டு விஷயங்களை எடுத்துக்கொண்டது. அதில் வடசென்னை பாக்சிங்கையும், தென் சென்னை கிரிக்கெட்டையும் எடுத்துக்கொண்டது. வடசென்னையின் பாக்சிங் கலாச்சாரம் குறித்த படம்தான் சர்பேட்டா பரம்பரை. பல்வேறு பரம்பரைகளுக்கு இடையில் 90 களில் ரிங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் நடந்த தீவிர மோதல் குறித்து கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் சுவரசியாமாக பேசுகிறது இந்த படம்.

கதாபாத்திரம்

கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, ரங்கன் வாத்தியார், மாரியம்மா, பாக்கியம், வெற்றி, டாடி என்று படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பான நடிகர்களை தேர்வு செய்து, எல்லோருக்கும் படத்தில் தரமான ஸ்பேஸ் கொடுத்து பாக்சிங் திருவிழாவை கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் பா. ரஞ்சித். அதிலும் படத்தின் முதல் 20 நிமிடம் “அண்டர் டாக்” போல காமெடியாக பேசும் டான்சிங் ரோஸ்.. ரிங்கில் போடும் “ஆட்டம்”.. தரம்!.. கோலிவுட் வரலாற்றில் இப்படி வித்தியாசமான ரோலை இதுவரை உருவாக்கியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

படம்

இந்த கட்டுரை படத்தின் ரிவ்யூ கிடையாது.. இந்த படத்தில் பா. ரஞ்சித் காட்டி இருக்கும் மிக முக்கியமான அரசியல் பின்னணி குறித்த கட்டுரைதான் இது. வடசென்னையில் பாக்சிங் கலாச்சாரம் கோலோச்சிய 90 களில் ஒவ்வொரு வீரரும் ஹீரோவாக, நடிகர்களுக்கு இணையான பிரபலத்தோடு வலம் வந்தனர். சர்பேட்டா பரம்பரை, இடியாப்ப நாயக்கர் பரம்பரை என்று பல்வேறு பாக்சிங் பரம்பரைகளுக்கு இடையிலான பாரம்பரிய மோதலை பற்றித்தான் படம் பேசுகிறது.

திமுக

தமிழ் சினிமாவில் முதல்முறை என்று சொல்லும் அளவிற்கு வெளிப்படையாக திமுக, அதிமுக, எம்ஜிஆர், கருணாநிதி, காங்கிரஸ் என்று பல்வேறு கட்சிகளின், அரசியல் தலைவர்களின் பெயர்களை வெளிப்படையாக சொல்லி, எமர்ஜென்சி காலத்தில் நடந்த அரசியல் மோதல்களை அப்படியே அழுத்தம் திருத்தமாக இந்த படம் பதிவு செய்து இருக்கிறது. முக்கியமாக 3 விஷயங்களை ரஞ்சித் இந்த படம் மூலம் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

பதிவு

முதல் விஷயம்.. திமுகவின் பாக்சிங் ஆதரவு. ஒரு காலத்தில் சென்னையில் பாக்ஸர்களுக்கு யானை மீது ஊர்வலம் அளிக்கும் அளவிற்கு திமுகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அங்கு பாக்சிங் கலாச்சாரத்தை ஆதரித்தனர். பாக்சிங் போட்டிகளை திமுக எப்படி எல்லாம் ஆதரித்தது என்பதை வெளிப்படையாக கட்சி பெயரை சொல்லி , கருப்பு சிவப்பு கொடியை காட்டி தைரியமாக விளக்கி இருக்கிறார். அப்போது பாக்ஸர்கள் பலர் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் நெருக்கமாக இருந்தது, அந்த கலை வளர் திமுக எப்படி உடன் இருந்தது என்பதையும் பா. ரஞ்சித் படம் நெடுக காட்டி இருக்கிறார்.

திமுக

இரண்டாவதாக திமுக எமர்ஜென்சி காலத்தில் காங்கிரசை எப்படி எதிர்த்தது. காங்கிரசுக்கு எதிராக திமுகவினர் எப்படி போராடினார்கள், எங்கெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் படம் நெடுகிலும் பா. ரஞ்சித் பதிவு செய்துள்ளார். அதிலும் முதல் சீனிலேயே சர்பேட்டை பரம்பரை வீரரை திமுக காரராக (கருப்பு சிவப்பு உடையிலும்), இடியாப்ப நாயாக்கர் பரம்பரை வீரர் வில்லன் வேம்புலியை (காங்கிரஸ் கொடி) காங்கிரஸ் உடையிலும் காட்டி எமர்ஜென்சி சமயத்தில் இருந்த மோதலை நேரடியாக பா. ரஞ்சித் பதிவு செய்து இருக்கிறார்.

எதிர்ப்பு

இதில் ரஞ்சித் பதிவு செய்த மிக முக்கியமான விஷயமே.. திமுக எமர்ஜென்சியை எப்படி எதிர்த்தது. தமிழ்நாட்டில் யாரெல்லாம் எமர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள் என்பதுதான். எமர்ஜென்சி காலத்தில் திமுகவினர் உள்ளே இருந்ததால்.. வெளியே வடசென்னையின் பாக்சிங் எப்படி தடம் மாறியது, அதில் எப்படி ரவுடியிசம், கள்ளச்சாராயம் புகுந்தது என்பதையும் ரஞ்சித் ஒளிவு மறைவின்றி காட்டி உள்ளார். அதிலும் ஒரு காட்சியில்.. எப்பா கருணாநிதி மகனையே கைது பண்ணிட்டாங்களாம்.. பாக்சிங்கை நிறுத்துங்க என்று முதல்வர் ஸ்டாலின் எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டதை எல்லாம் காட்டி இருக்கிறார்கள்.

மறைவு

அதோடு சில பாக்சிங் வீரர்கள் அதிமுக புள்ளி ஒருவருடன் இணைந்து திசை மாறுவதாக காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. திமுக ஆதரவாளராக இருந்த ஹீரோ எம்ஜிஆர் ஆதரவாளராக மாறி, அதன்பின் பாக்சிங் ஆடாமல் திசை மாறும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் காலத்தில் வடசென்னையில் அதிமுக புள்ளி ஒருவரின் கட்டுப்பாட்டில் சில பாக்ஸர்கள் இருந்ததை சுட்டிக்காட்டி, அவர்கள் சிறைக்கு சென்றதை சுட்டிக்காட்டி இந்த காட்சியை ரஞ்சித் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில்

எமர்ஜென்சி எதிர்ப்பு, திமுக, அதிமுக மோதல் என்று பல்வேறு புள்ளிகளை தொட்டு.. இது நம்ம காலம். இன்னும் எத்தனை காலத்துக்குதான் அவங்களுக்கு கீழேயே இருக்கிறது என்று வலுவாக பல இடங்களில் தலித் சமுதாய விடுதலை குறித்தும் பா. ரஞ்சித் தனது ஸ்டைலில் பதிவு செய்து இருக்கிறார். மலையாள சினிமாக்களில் பொதுவாக எல்டிஎப், யுடிஎப் சார்ந்த காட்சிகளை அதே கட்சி பெயர் சொல்லி, வெளிப்படையாக எடுப்பது வழக்கம். ஆனால் தமிழ் படங்களில் அந்த வெளிப்படைத்தன்மை இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்!

அதை இந்த படத்தில் பா.ரஞ்சித் பூர்த்தி செய்துள்ளார்.. வெளிப்படையாக அரசியல் பேசி.. ஓடிடி ரிலீஸ் என்பதால் பெரிதாக சென்சார் இன்றி படத்தை முழுமையான ஒரு “raw” படத்தை வெளியிட்டதற்கே பா. ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே