விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் திரைப்படம் தாமதமாக நேற்று மாலையில் வெளியானது.

சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் படம் திரையிடப்படுகிறது.

சங்கத் தமிழன் திரைப்படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலையில் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.

சங்கத் தமிழன் திரைப்படத்தை தயாரித்துள்ள விஜயா புரொடக்ஷன் நிறுவனம், அஜித் நடித்த வீரம் படத்தையும் தயாரித்திருந்தது.

வீரம் படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விஜயா புரொடக்ஷன் மேற்கொண்டிருந்தது.

ஆனால் வரி விலக்கு கிடைக்காத நிலையில் விஜயா புரொடக்ஷன் நிறுவனம் 10 விழுக்காடு தொகையைத் திருப்பித் தர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த பிரச்சனையால் சங்கத் தமிழன் திரைப்பட வெளியீடு ஏற்கெனவே தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சங்கத் தமிழன் படத்தை தமிழில் வெளியிட இருந்த லிப்ரா நிறுவனத்திற்கு 11 கோடி ரூபாயை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் நேற்று காலை திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

அதேநேரம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் நேற்று மாலை 6 மணி காட்சி பல இடங்களில் திரையிடப்பட்டதாக விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று காலைக் காட்சி முதல் படம் திரையிடப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே