சேலம் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் கரோனா நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 500 படுக்கைகளில் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக சேலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து சேலம் இரும்பாலை வளாகத்திற்கு வந்த முதல்வர், அங்கு அமைக்கப்பட்டு வரும் கரோனோ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆர். ராஜேந்திரன் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் வள்ளி சத்தியமூர்த்தி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து கரோனா சிகிச்சை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இருப்பு உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் சிகிச்சை மையத்தை விரிவாக்கம் செய்ய தேவையான வசதிகள் உள்ளதா எனவும் முதல்வர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து இரும்பாலை வளாகத்தை விட்டு வெளியே வந்த முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் திருப்பூர் புறப்பட்டுச் சென்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே