“திராவிட இசைக் கருவியான நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது” என தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 17 ம் நூற்றாண்டிலிருந்து தஞ்சையில் புகழ்பெற்று வரும் திராவிட இசைக்கருவியான நாதஸ்வரம் கடினமான இசைக்கருவியாக இருந்ததாக கூறி, கடந்த 1955 ஆம் ஆண்டு கும்பகோணம் அருகில் உள்ள நரசிங்கம்பேட்டை கைவினைக் கலைஞர் ரங்கநாத ஆச்சாரி எளிமையாக வாசிக்கும் வகையில் ஒரு நாதஸ்வரத்தை உருவாக்கினார். அதுதான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம். தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டையில், தற்போது 20 குடும்பங்களை சேர்ந்த இசைக்கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு இசைக்கப்படும் பாரம்பரிய இசைக்கருவியான இந்த நாதஸ்வரம், ஆச்சாமரம் எனும் வகை மரத்திலிருந்து பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது.
300 ஆண்டுகள் பாரம்பரியமாக இசைக்கப்படும் இந்த நாதஸ்வரத்திற்கு, 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தற்போது புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார், அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி. இதுகுறித்து பேசுகையில், “பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் ராஜரத்னம் பிள்ளை வாசித்து உலகப்புகழ்பெற்றவை நரசிங்கம்பேட்டை. ஏற்கனவே தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் நாதஸ்வரத்துடன் சேர்த்து 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்த மாவட்டமாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது” என்றார்.