தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் தேதி வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைச்நாள் டிசம்பர் 13ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் வரும் 16ம் தேதி பரிசீலிக்கப்படும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசிநாள் இம்மாதம் 18ம் தேதி என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட வாக்குப் பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 30ம் தேதியும் நடைபெறும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையர், காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார். பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜனவரி 6-ம் தேதி பதவியேற்றுக்கொள்ளலாம் என்றும், மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வாகும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் உள்ளிட்டோர் ஜனவரி 11-ம் தேதி பதவியேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 18 ஆயிரத்து 974 பேர் நேரடித் தேர்தல் மூலம் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிர்வாகக் காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடக்க இருப்பதாகத் தெரிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.