மேட்டுப்பாளையத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பலி!

நெஞ்சை உலுக்கும் துயரம்!

மேட்டுப்பாளையம் அருகே கனமழையால் நான்கு வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஏரி காலனி பகுதியை சேர்ந்த அருக்காணி என்பவரது வீட்டின் கல்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அருகே உள்ள ஓவியம்மாள், சிவகாமி உள்ளிட்ட 3 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அருக்காணி, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, ஹரிசுதா உள்ளிட்ட 7 பெண்கள், 2 சிறுவர்கள் என 17 பேர் பலியாகினர்.

இதற்கிடையே, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் கிடந்த சடலங்களை ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம், மேட்டுப்பாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே