இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு – கூகுள் சுந்தர்பிச்சை

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75,000 கோடி) முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே `டிஜிட்டல் இந்தியா’ என்ற முயற்சியை முன்னெடுப்பதாகக் கூறி வந்தார்.

இதன்மீது பல விமர்சனங்களும் இருந்து வருகின்றன.

எனினும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் தொடர்ச்சியாக முதலீடு செய்வதாக அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் தற்போது ஆல்ஃபாபெட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் சார்பாக நிதியை அறிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டுக்கான `கூகுள் ஃபார் இந்தியா’ என்ற நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசும்போது, இதுதொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

பிரதமர் மோடியுடனும் இதுதொடர்பாக உரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக சுந்தர் பிச்சை, தனது ட்விட்டர் பக்கத்தில், `இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் ரூபாய் 75,000 கோடி நிதி அறிவித்துள்ளோம்.

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கொள்கையை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

எங்களுடன் இணைந்ததற்கு அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ரமேஷ் பொக்ரியால் இருவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் எதிர்காலம், டிஜிட்டல் பொருளாதாரம் மீதான எங்களது நம்பிக்கையின் பிரதிபலிப்புதான் இந்த முதலீடுகள் என்றும் 2020-ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் இன்று பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியமான நான்கு துறைகளில் முதலீடுகள் செய்யப்படும் என்றும் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்த முதலீடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களை சொந்த மொழியில் பயன்படுத்துதல், இந்தியாவுக்கென தனித்துவமாகப் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல், வணிகங்களை மேம்படுத்துதல், சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த முதலீடுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

முன்னதாக, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்த உரையாடல் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், `சுந்தர் பிச்சை உடனான உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் அதிக விஷயங்கள் குறித்து உரையாடலை மேற்கொண்டோம்.

குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து உரையாடினோம்.

கொரோனா காலத்தில் உருவாகி வரும் புதிய வேலை கலாசாரம் தொடர்பாகப் பேசினோம்.

உலகளவில் கொரோனா வைரஸால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறித்தும் விவாதித்தோம்” என்று கூறியுள்ளார்.

டேட்டா, சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவும் நம்பிக்கை குறைவை சரிசெய்வது தொடர்பாகவும் பிரதமர் மோடி, சுந்தர் பிச்சை இருவரும் உரையாடியுள்ளனர்.

கல்வி, கற்றல் போன்ற பல விஷயங்களில் கூகுளின் முக்கியத்தும் குறித்து கேட்டு தெரிந்துகொண்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே