புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக 5000 ரூபாய் ரொக்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிவர் புயலால் பல மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கால்நடைகள் சேதம், வீடு இடிந்து விழுந்தது எல்லாம் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளது. அதிகாரபூர்வமாக மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்களின் படகுகள், விவசாயிகளின் விளைபயிர்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும் – பரவலாகப் புயல் பாதிப்பு, பல மாவட்டங்களிலும் இருக்கிறது. குறிப்பாக, கடலூர் மாவட்டம் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து – இழப்புக்குள்ளாகியுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக 5000 ரூபாய் ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்றும், வீடு இழந்தவர்களுக்கு புது வீடு கட்டித்தருவதோடு – வேளாண் விளைபொருட்கள் இழப்பீட்டிற்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதுதவிர காவிரி டெல்டாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்யப்பட்டுள்ள விவசாயம் இன்னும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வருகிறது.

‘நிவர்’ புயல் காரணமாக இரு தினங்களில் பதிவு செய்யுங்கள் என்று அரசுத் தரப்பில் ஏற்கனவே அளிக்கப்பட்ட கெடுவை மறுபரிசீலனை செய்து – நவம்பர் 30-ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு கட்டணம் செலுத்தலாம் என்று நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் “கஜா புயல்” “2015 பெரு வெள்ளம்” போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டது போல், இந்த நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் கைவிடும் நோக்கில், அ.தி.மு.க. அரசு ஏனோதானோ என்ற முறையில் செயல்படக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று சென்னை பெரம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

அதுபோல் இன்றும் சைதாபேட்டை பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் ஸ்டாலின்.

நிவர் புயல் காரணமாக சாலைகளிலும்,வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே