2021 பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2,500 பணம் அடங்கிய பரிசு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

முதலாவதாக பெரிய சோரகை பகுதிக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு, பெருந்திரளான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுவரை பொங்கல் பண்டிகைக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் அத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல வழக்கமாக கரும்பு துண்டு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜனவரி 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்றும்; பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே