மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தமிழகம் மீட்போம் பிரச்சார கூட்டத்தில் இன்று மாலை வீடியோ வாயிலாக பேசினார் ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது:

விவசாயிகளுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு முதல்வர் தடை விதித்தார். சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு போட்டுள்ளார்கள்.

இங்கு பொது அமைதி எங்கே கெட்டுப் போனது?

சட்டத்தை விருப்பத்திற்கு தகுந்த மாதிரி மாற்றி நீங்க பேசிக்கிட்டு இருங்கீர்கள்.

நீங்க பிரச்சாரம் தொடங்கும் நாள் வரைக்கும் ஊரடங்குை நீடித்துக் கொண்டே வந்தீர்கள்.

மக்களின் நேரடி தொடர்புள்ள துறைகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகிறது. 

ஐந்து வருடங்களாக இந்த துறை ஊழலை ஒழிக்க வில்லை. ஆனால் ஆட்சி முடியும் நேரத்தில் நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக ரைடு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு சில அதிகாரிகளை கைது செய்து கொண்டு தாங்கள் தூய்மையான ஆட்சி தருகிறோம் என்று காட்ட விரும்புகிறார்கள்.

அதிகாரிகளை மட்டும்தான் லஞ்ச ஒழிப்புத்துறை பிடிக்குமா அமைச்சர்கள் வீடுகளுக்குப் போக மாட்டார்களா? இத்தனை வருடங்களாக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது திமுக கொடுத்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை எடுத்த நடவடிக்கை என்ன?

இதே போன்ற ஒரு நாடகம்தான் மினி கிளினிக் நாடகம். கடந்த சில நாட்களாக பெரிய சாதனை செய்தது போல முதலமைச்சர் பேசி வருகிறார்.

உண்மையில் மினி கிளினிக் தொடங்கி இருந்தால் அதை மனதார பாராட்டலாம். ஆனால் கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடி போல பழனிச்சாமியின் மினி மருத்துவமனை கிளினிக் அறிவிப்பு இருக்கிறது.

2000 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளுக்கு புதிதாக எத்தனை மருத்துவர்களை நீங்கள் வேலைக்கு எடுத்தீர்கள்?

எத்தனை செவிலியர்களை வேலைக்கு எடுத்துள்ளீர்கள்? எத்தனை மருத்துவமனைகளை புதிதாக கட்டியுள்ளீர்கள்? ஏற்கனவே இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர்களைக் இங்கே உட்காரவைத்து கணக்கை காட்டுகிறார்கள்.

இன்னொரு வாழைப்பழத்தை எங்கே என்று கவுண்டமணி கேட்கும்போது, அது தான் இது, என்று செந்தில் சொல்வது போல இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின் பெயரில் இவ்வாறு கிளினிக்குகள் ஆரம்பித்துள்ளன.

ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம் என்பதைப் போல எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்.

தமிழகம் மருத்துவ கட்டமைப்போடு இருக்க காரணம் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மருத்துவமனைகள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மினி மருத்துவமனைகளை கடந்த 4 ஆண்டுகாலமாக ஏன் அமைக்கவில்லை? ஆட்சி முடியும் போது தான் உங்களுக்கு முதல்வர் என ஞாபகம் வருகிறதா?

ஆட்சி முடியும் போதுதான் குடிமராமத்து பணிகளை ஆரம்பித்து உள்ளீர்கள்.

இப்போதுதான் தான் முதல்வர் என்ற நினைவு அவருக்கு வந்துள்ளது. இத்தனை ஆண்டு காலமாக பழனிசாமி தூங்கிக் கொண்டிருந்தாரா, இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே