உத்தரப்பிரதேச துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி விகாஷ் துபே கைது

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் இன்று கைது செய்யப்பட்டு இருக்கும் தாதா விகாஸ் துபே மீது இதுவரைக்கும் 60 வழக்குகள் உள்ளன.

கடந்த வாரம் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இவர், இதற்கு முன்பு தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சரையே சுட்டுக் கொன்றுள்ளார்.

இன்று காலை உஜ்ஜைனில் இருக்கும் மஹாகல் கோயிலுக்கு செல்லும் வழியில் மத்தியப்பிரதேச போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.

இவரை போலீசார் கைது செய்யும்போது, ‘நான் கான்பூரைச் சேர்ந்தவன், விகாஸ் துபே’ என்று கதறியுள்ளார்.

இதுகுறித்து உஜ்ஜைன் கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறுகையில், ”மஹாகல் கோயிலுக்கு செல்லும் வழியில் விகாஸ் துபேவை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது உண்மையை விகாஸ் ஒப்புக் கொண்டார்.

தான் தான் விகாஸ் துபே என்றார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்” என்றார்.

இவரை கைது செய்து இருப்பது மத்தியப்பிரதேச போலீஸ். உத்தரப்பிரதேச போலீஸ் இல்லை.

நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் இன்று உத்தரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

கான்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தால் தன்னை போலீசார் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சிய விகாஸ் துபே, உஜ்ஜைனுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அரசியல் பலம், பின்னணி கொண்ட இவரை போலீசாரால் இதுவரை ஒன்றும் செய்ய இயலவில்லை.

சமீபத்தில் கான்பூரில், பிக்ரு என்ற இடத்தில் பதுங்கி இருந்த விகாஸ் துபேவை பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் உள்பட எட்டு போலீசாரை சுட்டுக் கொன்ற பின்னர்தான், உத்தரப்பிரதேச மாநிலம் சுதாரித்துக் கொண்டது.

சினிமாவில் வருவதைப் போன்று, 2001ஆம் ஆண்டில் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கு இருந்த அப்போதைய அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சுட்டுக் கொன்றார்.

இதேபோல் 2000ஆம் ஆண்டில், தாராசந்த் இன்டர் கல்லூரியின் உதவி மேலாளரை சிவ்லி போலீஸ் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்றார்.

அதே ஆண்டில் மற்றொரு கொலை வழக்கும் இவர் மீது பதிவு செய்யப்பட்டது.

2004ஆம் ஆண்டில் சிறையில் இருந்தவாறு தனது உறவினரை திட்டமிட்டு கொன்றார்.

இந்த வழக்கில் விகாஸ் துபேவை சுட்டுக் கொல்லப்பட்ட அனுராக்கின் மனைவி விகாஸ் மீது குற்றம்சாட்டி இருந்தார்.

கொலை, கொள்ளை, கடத்தல் மட்டுமில்லை. நில ஆக்கிரமிப்பிலும் கில்லாடியாக இருந்த விகாஸ் 2002ஆம் ஆண்டில், கான்பூர் வரை தனது எல்லையை விரிவுபடுத்தி நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டார்.

பிலாவூர், ரின்யான், சவ்பேபூர் ஆகிய இடங்களில் இடம் வாங்கிக் குவித்தார்.

இவருக்கு அனைத்து அரசியல் கட்சிகளிலும் செல்வாக்கு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோதே, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நகர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவரை கைது செய்ய போலீஸ் குழு கடந்த வியாழக்கிழமை இரவு சென்றது. இந்தக் குழுவில் 25 போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

பிக்ரு கிராமத்தில் ஒரு வீட்டில் துபே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் குழு அங்கு சென்றது. போலீஸ் குழு கிராமத்துக்குள் நடந்து வராத வகையில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொக்லைன் வாகனத்தை விகாஸ் திட்டமிட்டே நிறுத்தியுள்ளார்.

போலீசார் நடந்து செல்லும்போது, அங்கு பதுங்கி இருந்த விகாஸ் துபே துப்பாக்கியால் தனது குழுவினருடன் இணைந்து சுட்டுள்ளார்.

இதன் பின்னர் காட்டு வழியில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உட்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விகாஸ் துபேவுக்கு போலீசார் செல்வது குறித்து முன்னரே தகவல் கொடுத்த ஸ்டேஷன் போலீஸ் அதிகாரி வினய் திவாரி பணியில் இருந்து தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

விகாஸ் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்ய இந்த திவாரி மறுப்பு தெரிவித்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இப்படி போலீசாரை தன் வசம் செய்து காரியங்களை சாதித்து வந்த விகாஸ் துபேவை இறுதியில் போலீசாரின் பிடியில் சிக்கினார்.

விகாஸ் துபேவை கைது செய்து இருப்பதற்கு மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாத் தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே