கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
தற்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் ஊரகப்பகுதிகள் மற்றும் சென்னை என இரண்டு பகுதிகளாக பிரித்து, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தனித்தனியே வகுத்துள்ளது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எவை இயங்கலாம்?
தடை செய்யப்பட்ட ( Containment zone) பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
1. அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலை பணிகளுக்கு அனுமதி. பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி
2. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% பணியாளர்களை (குறைந்தது 20 பேர்) கொண்டு செயல்பட அனுமதி; நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்
3. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
4. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்
5. முடி திருத்தகங்கள்/அழகு நிலையங்கள் தவிர அனைத்து தனி கடைகள், ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
6. பிளம்பர், எலக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் போன்ற பணியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.
7. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் (SEZ, EOU, Export units) மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று 25% பணியாளர்களை ( குறைந்தது 20 பேர்) கொண்டு செயல்பட அனுமதி. நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.
வேளாண் சார்ந்த பணிகள், தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ATM, ஆதரவற்றோர் இல்லங்கள் எவ்வித தங்குதடையுமின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது :
- 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றம் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.
- 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
- தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்): 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- மின்னணு வன்பொருள் உற்பத்தி: 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- கிராமப்புரங்களில் உள்ள ஒருங்கிணைந்த நுற்பாலைகள் (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்பம் : 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- நகர்புரங்களில் கட்டுமானப் பணிகள்: பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்; பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
- பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.
- மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
- அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.
- மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- கிராமப்புரங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.
- உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.
- நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியினை பின்பற்றியும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தியும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைதீவிரமாக கடைபிடிப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.
கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம். பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.
நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம்.
அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புர தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.
மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.
அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளை பின்பற்றி, மாவட்ட ஆட்சியர்கள் / சென்னை மாநகர ஆணையர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, 6.5.2020 முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.