இசைஞானி இளையராஜா தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்..!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று பார்வையிட்டார்.

ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கின்போது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னை வந்த ரஜினி அதன்பிறகு வெளியே எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை.

கடந்தவாரம் அவர் வீட்டின் அருகிலேயே மருமகன் தனுஷ் வீடுகட்ட வாங்கியிருக்கும் புதிய இடத்தின் பூமி பூஜையில் மட்டுமே கலந்துகொண்டார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அங்கே இருந்தார்கள்.

இந்நிலையில் முதல்முறையாக போயஸ் கார்டனைவிட்டு வெளியே வந்த ரஜினி, கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு வந்து சில மணிநேரங்கள் அங்கே இருந்து ராஜாவோடு மனம்விட்டு பேசிச் சென்றிருக்கிறார்.

நேற்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து இளையராஜாவுக்கு போன் வந்திருக்கிறது. வீட்டிலிருந்து ஸ்டூடியோவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த ராஜா “வாங்க” என ஒற்றைச்சொல்லில் அழைக்க, புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டார் ரஜினி.

வீட்டிலிருந்து அப்படியே ஸ்டூடியோவுக்கு சேர்ந்தே போயிருக்கிறார்கள் இருவரும். புது ஸ்டூடியோவைப் பார்வையிட்டு, அதன் அமைதியில் லயித்து இரண்டு மணிநேரம் அவரோடு அளவளாவிட்டுப் போயிருக்கிறார் ரஜினி.

இன்று மறுபடியும் போன். ரஜினிதான் அழைத்திருக்கிறார். “ஸ்டூடியோவுக்கு வரவா சாமி?” என ரஜினி கேட்க, “நல்லா வாங்க” என ராஜா பதில் சொல்ல இன்றும் சந்திப்பு நடந்தது.

ஸ்டூடியோவை மறுபடி பார்த்து, இளையராஜாவின் ரெகார்டிங்கைக் கேட்டவர் “இங்கே நிம்மதி கிடைக்குது சாமி” என நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி.

அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். அதன் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே