ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்..!!

அரசியலில் ஈடுபட முடியாதது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெளிவான அறிக்கையைக் கொடுத்த பின்னரும் அவரை அரசியலுக்கு வரச்சொல்லி நிர்பந்தித்தும், போராடுவோம் என அறிவிப்பதும் நியாயமானது அல்ல என்று ரஜினி மக்கள் மன்றம் கண்டித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாகக் கூறியிருந்தார். அதற்குள் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இருந்தபோது படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தும் மருத்துவமனையில் சேர்ந்து தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

மருத்துவர்களின் அறுவுறுத்தலைத் தொடர்ந்து, தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக நீண்ட அறிக்கை மூலமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் மன்றத்தினருக்கு வணக்கம்.

நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனைகளை மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பிவரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படியும்தான் அரசியலுக்கு வரமுடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடச்சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல்.

இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.

நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே