சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் மற்றும் ஓட்டுனரை விருருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அதிரடியாக கைது செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே. டி. ராஜேந்திர பாலாஜி. இவர் தான் வகித்த பால் வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3 கோடி வரை மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்திருந்தனர் .இதற்கிடையே தன்னை எந்த ஒரு வழக்கிலும் கைது செய்யக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர், இதன் காரணமாக ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மனோகர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்களான வசந்தகுமார் அவரது சகோதரர் ரமணன் மற்றும் ராஜேந்திர பாலாஜியின் கார் ஓட்டுனர் ராஜ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்.
இரவோடு இரவாக நடந்த விசாரணை குறித்து தகவல் அறிந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய முனைப்பு காட்டி வருவதாக குற்றம் சுமத்தி வழக்குக்கே சம்பந்தம் இல்லாத அவரது சகோதரி மகன்களையும் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய மூவரையும் விடுவிக்க வேண்டும் ,வழக்கில் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் ,கைது செய்யப்பட்ட மூவரின் உயிருக்கு காவல்துறை தான் பொறுப்பு என்பதை வலியுறுத்தி திருத்தங்கல் காவல் நிலையத்தின் முன்பாக திரண்டு நின்றிருந்தனர் .