பெங்களூருவுக்கு 178 ரன்கள் நிர்ணயம் செய்த ராஜஸ்தான்..!!

ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.

துபையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

ஆர்சிபி அணியில் சிராஜுக்குப் பதிலாக குர்கீரத் சிங்கும் ஷிவம் டுபேவுக்குப் பதிலாக ஷபாஸ் அஹமதுவும் தேர்வாகியுள்ளார்கள்.

புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி அணி 8 ஆட்டங்களில் 5 வெற்றிகள் பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

ராபின் உத்தப்பாவும் பென் ஸ்டோக்ஸும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். 3-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்துகளில் நான்கு பவுண்டரிகள் அடித்தார் உத்தப்பா.

உதானாவின் முதல் ஓவரில் உத்தப்பாவும் ஸ்டோக்ஸும் 17 ரன்கள் எடுத்தார்கள். பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் மாரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.

22 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் நன்கு விளையாடி வந்த உத்தப்பா, சஹால் பந்துவீச்சில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒரு சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன், சஹாலின் அடுத்த பந்தில் 9 ரன்களில் வீழ்ந்தார்.

இதன்பிறகு ஸ்மித்தும் பட்லரும் பாதிப்பைச் சரிசெய்ய முயன்றார்கள்.

பட்லர் 24 ரன்களில் மாரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிகவும் பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் 30 பந்துகளில் அரை சதமெடுத்தார். கடைசி ஓவரில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. தெவாதியா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி அணியின் கிறிஸ் மாரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே