இந்திய எல்லைப் பகுதிக்கு உள்பட்ட நிலப்பரப்பை, பிரதமர் மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார், இது குறித்து மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் விவாதமே நடைபெற்றுள்ளது.

இதனால், இது தொடர்பான ஹேஸ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டானது.

இந்திய எல்லைப்பகுதியான கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினர் அத்துமீறி உள்ளே நுழைவது, ஆக்கிரமிப்பது தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிழக்கு லடாக் தொடர்பான நிலைப்பாடு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்யசபாவில் நேற்று ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். 

அதில், நமது படைகள் ‘பிங்கர் 4’ பகுதியில் இருந்து ‘பிங்கர் 3’ பகுதியில் நிறுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்., எம்.பி., ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பிங்கர் 4’ நிலப்பரப்பும் நமது எல்லைக்குட்பட்டதே.

அங்குதான் நமது படைகள் முகாமிடுவது வழக்கம். ஆனால், ஏன் நமது நிலப்பரப்பை பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு விட்டுக் கொடுத்தார்?,’ என ராகுல் கேள்வி எழுப்பினார்.

மேலும், ”சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

உண்மை என்னவெனில், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

பிரதமர் ஒரு கோழை, அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது.

அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார். ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார்,” என்றும் அவர் கூறினார்.ராகுலின் இந்த பேட்டி இந்திய அளவில் டிரெண்டானது.

டுவிட்டரில் இது குறித்து RahulGandhiExposesBJP, Pappu போன்ற ஹேஸ்டேக்குகளுடன் விவாதம் நடைபெற்றது. சிலர், ‘எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதை மத்திய அரசு மறைக்கிறது.

ராகுல் அதனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதற்கு மத்திய பா.ஜ., என்ன பதில் வைத்திருக்கிறது’ என கேள்வியெழுப்பினர். சிலர், ‘ராகுல் எப்போதும் பா.ஜ.,வின் மீது தவறான குற்றச்சாட்டை மட்டுமே வைக்கிறார்.

எல்லை பிரச்னையில் காங்., செய்ததை விட பா.ஜ., ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு அருமையாகவே உள்ளது,’ என்றும் எதிர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இன்னும் சிலர், ‘சீனாவின் மீது துணிச்சலாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்க தயங்குகிறது.

அந்த அளவிற்கு நாம் பலவீனமாக இருக்கிறோமா’ என்றும், ஒருவர், ‘மத்திய அரசு தொடர்ந்து பொய்களை கூறி சமாளித்து வரும் நிலையில், மத்திய அரசின் முகத்திரையை ராகுல் கிழித்துள்ளார்,’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இதனால் இந்த விவகாரம் தேசிய அளவில் டுவிட்டரில் டிரெண்டானது. பலரும் RahulGandhiExposesBJP, Pappu போன்ற ஹேஸ்டேக்குகளில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே