டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க முடியாது : பாடகி சின்மயி

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது ஏற்க முடியாது எனவும்; தன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். 

சென்னை சாலிகிராமத்தில் டப்பிங் யூனியன் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பின்னணி பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், என்னை தேர்தலில் போட்டியிடவிடாமல் தகுதிநீக்கம் செய்தது பற்றி என்னிடம் தகவல் கூறவில்லை, எதற்காக தகுதி நீக்கம் செய்தனர் என்பதற்கான காரணமும் கூறவில்லை என பேசினார்.

இதுவரை 42.5 லட்சம் ரூபாய் வரை வரவை அதிகம் செலவு செய்துள்ளதாகவும், டப்பிங் யூனியன் கட்டிடம் கட்டியதிலும் பல்வேறு மோசடிகள் அரங்கேறியுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக கேள்வி எழுப்புபவர்களை எல்லாம் போன் செய்வதும், மிரட்டுவதும், தகாத வார்த்தைகளால் பேசுவதும் வாடிக்கையாகி வருவதாகவும்; நடிகர் ராதாரவியை போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி முறையிட்டு நீதியை மீட்டெடுப்போம் என கூறிய சின்மயி, எந்த சங்க சட்டவிதிமுறைகளின்படி என்னை தகுதி நீக்கம் செய்தார்கள் என்பதற்கு முறையான விளக்கத்தை எனக்கு நிச்சயம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே