அமைதியான கெட்டவர்கள் : பட்டுக்கோட்டை பாலு

“தங்கமான மனுசன் அவர். தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பார். யார் விசயத்துலயும் தலையிடமாட்டார். எந்த தப்பு தண்டாலயும் தலைய குடுக்க மாட்டார்” – என்பது நல்லவருக்கான இலக்கணமாய் புரிந்து வைத்திருக்கிறோம்.

மாறாக நீடித்திருக்கும் ஏதேனும் வழக்கத்தை கேள்வி கேட்பவர்களை கண்டால் நமக்கு பிடிப்பதில்லை. தன் வேலையைத் தாண்டி பொது விசயங்களில் தலையிடுபவரை அடாவடி என்றும் அராத்து என்றும் வெறுக்கத் தொடங்குகிறோம். அடுத்தவர் சிக்கலுக்கோ, பொதுச்சிக்கலுக்கோ நம்மிடம் கேள்வி கேட்பவர்களைப் பார்த்தால் முதலில் என்ன சிக்கல் என்பதைத் தாண்டி ” இதில் உன்னோட பிரச்சனை என்ன? நீ யார் கேட்பதற்கு?” – என்பதே முக்கிய கேள்விகளாக நம் நாவில் முன்னுக்கு வந்து நிற்கின்றன.

உண்மையில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்களே தீயவர்கள். ஆகப்பெரிய சுய நலவாதிகள். சமூகத்தில் பிறந்து, சமூகத்தால் ஆளாகியிருக்கும் இவர்கள் சமூகத்துக்கு எந்த பிரதிபலனும் கொடுக்க முன்வராத நன்றி கெட்டவர்கள். ஆதிக்கப்பிரிவினரிடம் நல்ல பெயர் எடுத்துக் கொண்டு தனக்கான சுய நலக் காரியத்தை மட்டும் சத்தமின்றி சாதித்துக் கொள்பவர்கள். ஒருபோதும் தன் உழைப்பை, நேரத்தை, பணத்தை, அறிவை எளியவர்களின் துயர் துடைக்க பயன்படுத்தாத அவமானச் சின்னங்கள். சமத்துவம் இல்லாத வாழ்வியல் சூழலில் எந்தத்தருணத்திலும் இவர்கள் பாதிக்கப்படுபவர்களுக்கு குரல் கொடுக்க முன்வருவதில்லை. அடக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராட முன் வருவதில்லை . எது அறம் என்பதை விட நாலு பேர் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற போலி அந்தஸ்த்துதான் இவர்களுக்கு முக்கியமாகி விடுகிறது. இதிலிருந்தே இவர்களுடையே கொடூர கல் மனதை கண்டுபிடித்துவிட முடியும்.

இதற்கு எதிர் மாறானவர்கள் நம் பார்வையிலான அடாவடிகளும், அராத்துகளும். நாம் நினைப்பது போல் தீயவர்கள் அல்ல அவர்கள். உண்மையில் அவர்கள் பேரன்பின் வடிவானவர்கள். அவர்களால் கண் முன் ஒரு சாரருக்கு நடக்கும் அநீதியை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எனவேதான் தனது உழைப்பை, நேரத்தை, பணத்தை, அறிவை செலவழித்து பாதிக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். எளியவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடுகிறார்கள். மொத்தத்தில் தனக்கென வாழாமல் குரல் அற்றவர்களின் குரல்களாகவே மாறிப் போகிறார்கள். நாலு பேர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையும் தாண்டி தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை அறத்தோடு நிற்பதே முக்கியம் என்பது இவர்கள் நிலைப்பாடாய் இருக்கிறது.

எனவே நல்லவர் குறித்தும், தீயவர் குறித்தும் நமக்கான புரிதல்களை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இனியொருமுறை தானுண்டு தான் வேலையுண்டு என்று இருப்பவர்களை நல்லவர்கள் என்று சொல்லாதீர்கள். முடிந்தால் அப்படி இருப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்பதை அவர்களுக்கு தன்மையாக விளக்குங்கள்.

இனி எங்கேனும் யாரேனும் அடுத்தவர்களுக்காக குரல் உயர்த்திப் பேசுவதை பார்த்தால் அவரை அடாவடி அராத்து என்று நினைக்காதீர்கள். அந்தச் செயல் உங்களையும், என்னையும் போல் அல்லாமல், ஒரு கனிந்த இதயத்தின் வெளிப்பாடு என்பதை அடையாளம் காணுங்கள்.

நீங்கள் பயணம் செல்லும் வழியில் யாரேனும் பொதுக்காரியம் எதற்கேனும் தெருவோரம் நின்று போராடிக்கொண்டிருந்தால், அவர்களை ரௌடிகளாக, வன்முறையாளர்களாக நினைக்காதீர்கள். அவர்களே இவ்வுலகின் ஆகச்சிறந்த பேரன்புக்காரர்கள் என்று அடையாளம் காணுங்கள்.

  • பட்டுக்கோட்டை பாலு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 398 posts and counting. See all posts by Jiiva

One thought on “அமைதியான கெட்டவர்கள் : பட்டுக்கோட்டை பாலு

  • அருமையான கட்டுரை

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே