நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அதிருப்தி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 14ம் தேதி கூடும் லோக்சபா கூட்டத்தொடரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

17வது லோக்சபாவின் 4வது அமர்வு வரும் 14ம் தேதி துவங்குகிறது. அக்.,1 அன்று நிறைவு பெறும்.

இந்த தொடரின் முதல் நாள்(செப்.,14) மட்டும் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும். 15ம் தேதி முதல் அக்., 1 வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை கூட்டத்தொடர் நடத்தப்படும் என லோக்சபா செயலகம் அறிவித்தது.

மேலும், கூட்டத் தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் தீர்மானம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் ஓ பிரையன், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம்தேதி தொடங்கும் நிலையில் எம்.பி.,க்கள் அனைவரும் கேள்வி நேரத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து 15 நாட்களுக்கு முன்பே தாக்கல் செய்வது அவசியம் எனக் கூறப்பட்டது.

எனவே ஆளும் அரசை கேள்வி கேட்கும் உரிமையை எதிர்க்கட்சியினர் இழக்கிறார்கள். 1950-களில் இருந்து நாடாளுமன்றம் இதுபோன்றுதானே செயல்பட்டு வருகிறது.

பின் ஏன் கேள்வி நேரத்தை ரத்து செய்தீர்கள்.

கொரோனாவைக் காரணம் காட்டி ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள்.கேள்வி நேரம் என்பது முக்கியமானது.

ஏனென்றால், நாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்து எம்.பி.,க்கள் எழுப்பும் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

ஆனால், கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரத்தில் அது இல்லை.

இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் மத்திய அரசிடம் கேள்வி ஏதும் கேட்க முடியாது.

33வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் (1961), 98-வது(1976), 99வது(1977) ஆகிய தொடர்களிலும் கேள்வி நேரம் இருக்கவில்லை. ஆனால், தொடர் சிறப்பு தொடராக இருந்தது. ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர்தானே.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சில வலிமையான தலைவர்கள், கொரோனாவைக் காரணமாகக் கூறி, ஜனநாயகத்தையும், எதிர்ப்பையும் கட்டுப்படுத்துவார்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நான் கூறினேன்.

தாமதமான நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்த அறிவிக்கையின் நோக்கமே, கேள்வி நேரம் கூடாது என்பதுதான். எங்களை பாதுகாப்பாக வைக்கவே கேள்விநேரம் இல்லை எனும் வாதத்தை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசைக் கேள்வி கேட்பது என்பது ஆக்ஸிஜன் போன்றது.

ஆனால், இந்த அரசு நாடாளுமன்றக் கூட்டத்தை அறிவிக்கை மூலம் குறைத்து, தேவையான மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்ள தன்னிடம் இருக்கும் பெரும்பான்மையை ரப்பர் ஸ்டாம்ப் போல் பயன்படுத்துகிறது.

பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான கேள்வி நேரம் எனும் செயல்முறை இப்போது அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே