பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2020 தொடரின் 53 ஆவது போட்டி சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 29 ரன்னிலும், மயன்க் அகர்வால் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற 6 ஆவது வீரராக களமிறங்கிய தீபக் ஹூடா 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என மொத்தம் 62 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 

இது அவருக்கு இரண்டாவது ஐபிஎல் அரை சதமாகும். ஐபிஎல் தொடரில் தீபக் ஹூடா அடித்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

இறுதியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை அடித்தது.

154 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டூ பிளசிஸ் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் அடித்தனர்.

டூ பிளசிஸ் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து அதிரடியாக விளையாடி ருத்ராஜ் கெய்க்வாட் 38 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 62 ரன்கள் அடித்தார்.

சென்னை அணி 18.5 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் பஞ்சாப் அணியின் பிளே – ஆஃப் கனவு தகர்ந்தது.

சென்னை அணி 12 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்திலும், பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே