கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் உடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள 40 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு இன்னும்6 நாட்களில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே, மார்ச் 20, ஏப்ரல் 2 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிரதமர், அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று நான்காவது முறையாக கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்ககளின் நிலைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை. அவரின் உரையை, தலைமைச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் வாசிக்க உள்ளார்.
ஊரடங்கை மே 16-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் ஏற்கனவே மே 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.