எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1.15 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்றுமுதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு, முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

60 வயதைக் கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலையில், பிரதமர் மோடி காலையிலேயே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பிரதமர் மோடிக்கு கோவேக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னுடைய முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். உலக அளவிலான கொரோனாவுக்கு எதிரான சண்டையில் விரைவாக நம்முடைய மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தடுப்பூசி கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு மருந்து போடுவதற்கு தகுதியான அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாம் இணைந்து கொரோனாவிலிருந்து இந்தியாவுக்கு விடுதலை அளிப்போம்’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே