கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை..!

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தெலங்கானாவில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 7 பேர் மற்றும் ராஜஸ்தானில் 3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் வரும் 31-ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் அடுத்த மாதம் 5-ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ-இல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் இன்று முதல் நடைபெறாது என்று சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்வுகள் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல, ஜேஇஇ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் செயல்படும் என்றும், ரயில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களை 50 சதவீத பயணிகளுடன் இயக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே அலுவலகத்திலிருந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு வருபவர்கள் குறித்து அரசின் வலைதளத்தில் பதிவு செய்யுமாறு முதலமைச்சர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்கொரியாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், தங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அவசரமில்லாத மருத்துவ தேவைகளுக்காக வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 4 அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, வைரஸை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வகுக்க தனிநபர்கள், உள்ளூர் அமைப்புகள் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாநில அரசுகள், மருத்துவத் துறையினர், துணை மருத்துவப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே