அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி… களைகட்டும் ராம்ஜென்ம பூமி..!!

அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார்.

டெல்லியில் இருந்து விமானத்தில் லக்னோ வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார். 40 கிலோ வெள்ளி செங்கலை நிறுவி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவுக்கு சாமியார்கள், விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் சிறப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த விழா நேற்று காலையில் கவுரி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 சாமியார்கள், அடிக்கல் நாட்டப்பட உள்ள ராமஜென்மபூமி வளாகத்தில் இந்த சடங்குகளை தொடங்கினர்.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா காரணமாக அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்குகளால் முக்கிய இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் வருகை தர இருப்பதால் அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே