தமிழ்த்தாய் இளமையானவள். உலகின் மூத்த மொழியாக இருந்தும் இன்றளவும் இளமை குன்றாமல் இருக்கிறாள்.

தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிற குறையவில்லை. அப்படிப்பட்ட தமிழே, தமிழாகிய பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன் என்று பாடியுள்ளார் மனோன்மணியம் சுந்தரனார்.

மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து சாதி, சமய வேறுபாடின்றி மக்களை ஒன்றுபடுத்துவதில் மாநில கீதங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடமுடியாது

நீ ராருங் கடலுடுத்த… என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்தும் பாடல் ஆகும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளி கல்வி நிறுவன விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்க கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

இப்பாடல் 1970ஆம் ஆண்டு முதல் பாடப்பட்டு வருவதால், நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு கடந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக அமைந்தது.

மனோன்மணியம் சுந்தரனார்

தமிழ் தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய சுந்தரனார், கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் 1855 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பெருமாள்-மாடத்திஅம்மாள் மகனாகப் பிறந்தார்.

இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. 1876ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். 1877ஆம் ஆண்டில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880ஆம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.

அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவரது மனைவியார் சிவகாமி அம்மாள்.

சுந்தரனார் எழுதிய மனோன்மணியம் எனும் நாடகம் புகழ்பெற்றது. அதில் தான் வாழ்த்துப் பாடல் பகுதியில் நீராருங் கடலுடுத்த பாடல் இடம் பெற்றுள்ளது. இவர் 1897 ஏப்ரல் 26 அன்று தன்னுடைய 42வது வயதிலேயே மறைந்து விட்டார்.

மாநில பாடலாக அறிவிப்பு

1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல மாற்றங்கள் நடைபெற்றன. அதுவரை தமிழ்நாட்டு அரசின் சின்னத்தில் குறிக்கோள் வாசகமாக நிலவி வந்த “சத்யமேவ ஜெயதே” என்னும் வடமொழித் தொடர் “வாய்மையே வெல்லும்” என தமிழில் மாற்றப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வரும் முன்பு அரசு விழாக்களின் இறைவணக்க பாடலாக பல்வேறு பாடல்கள் அதுவரை பாடப்பட்டு வந்தன. அவற்றுள் பல பாடல்கள் பிறமொழி பாடல்களாய் இருந்தன. தமிழ்நாடு அரசு விழாக்களில் பிறமொழி பாடல்களை தவிர்க்கும் வகையிலும், சமய சார்பற்ற அரசின் நோக்கிற்கேற்ப சமய சார்பினை தவிர்க்கும் வகையிலும் தமிழ் வாழ்த்து பாடல் ஒன்றினை அறிமுகப்படுத்த அண்ணா விரும்பினார்.

பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதி 1891ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மனோன்மணியம் என்னும் நாடகநூலில் அமைந்த “நீராருங் கடலுடுத்த” என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இதற்கு பொருத்தமானதாக இருக்கும் நினைத்தார் அண்ணா. எனினும் அது குறித்த அரசாணை பிறப்பிக்கும் முன்பே அவர் மறைந்து விட்டார்.

கருணாநிதி ஆட்சியில் அரசாணை

அண்ணாவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி இதற்கான அரசு ஆணையைப் பிறப்பித்தார். 23.11.1970ஆம் நாளன்று, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இயற்றிய “நீராருங் கடலுடுத்த” என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என, அரசு பொதுத்துறையின் சார்பாக அரசாணை வெளியிட பட்டது. இப்பாடலைச் சிறந்த முறையில் இசையமைத்து பாடகர்களுடன் தாமும் பாடினார் எம்.எஸ்.விசுவநாதன்.

51 ஆண்டுகள் நிறைவு

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அரசு விழாக்களிலும், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் விழாக்களிலும் விழா நிறைவின்போது பாடப்படுகிறது. மாநில கீதம் என்பது தேசிய கீதத்துக்கு சமமான சிறப்பும், மதிப்பும் வாய்ந்தது. விழா நிறைவில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பதை போன்று, விழா தொடக்கத்தில் மாநில கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்தாய் வாழ்த்துப்பாடல் விளக்கம்

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”

இந்த பாடலின் விளக்கத்தை நாம் தெரிந்து கொள்வோம்;

பூமி என்ற பெண் நீராலான கடலை ஆடையாக அணிந்துள்ளாள். அவளின் சிறப்புமிக்க அழகிய முகமாக பாரத கண்டம் திகழ்கிறது. அம்முகத்திற்கு பிறைநிலவு போன்ற நெற்றியாக தக்காணம் அமைந்துள்ளது. அந்த நெற்றியில் நறுமணமிக்க பொட்டு வைத்தது போல் தமிழகம் உள்ளது.
பொட்டின் மணம் எல்லோரையும் இன்புறச்செய்வது போல் தமிழ்த்தாயும் எல்லாதிசைகளிலும் புகழ்பெற்றவளாக இருக்கிறாள். உலகின் மூத்த மொழியாக இருந்தும் இன்றளவும் இளயையாக இருக்கிறாள். தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிற குறையவில்லை. அப்படிப்பட்ட தமிழே, தமிழாகிய பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன். நீ வாழ்க என்று அழகாக எழுதியுள்ளார் மனோன்மணியம் சுந்தரனார்.

மு.க ஸ்டாலின் உத்தரவு

தமிழ்தாய் வாழ்த்தினை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும். ​அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே