அதிமுக ஆட்சியில் விஷம் போல் ஏறியுள்ளது விலைவாசி – ஸ்டாலின் பரப்புரை..!!

அதிமுக ஆட்சியில் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னர் பகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.ரவி, அவிநாசி தனி தொகுதி வேட்பாளர் இரா.அதியமான், பல்லடம் தொகுதி வேட்பாளர் முத்துரத்தினம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாகன பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.

அப்போது அவர் தொண்டர்களின் மத்தியில் பேசியதாவது: அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பாழ்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடனை அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளனர்.

நாம் ஒவ்வொருவரின் பேரிலும் ரூ.62 ஆயிரம் கடன் உள்ளது. அதிமுகவினர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி விளம்பரம் செய்து வருகின்றனர்.

திமுக ஆட்சியின் போது தொழில் வளர்ச்சி 10.9 சதவீதமாக இருந்த நிலையில் தற்போதைய அதிமுக ஆட்சியில் 4.9 சதவீதமாக உள்ளது. இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று எந்த முதலீட்டையும் கொண்டுவரவில்லை.

இது வெற்றிநடையல்ல வெற்று நடைபோடும் தமிழகம். தேர்தல் வரும் என்ற வேளையில் அவசர அவசரமாக விதிமுறைகளை எல்லாம் மாற்றி டெண்டர் விட்டு அடிக்கல் நாட்டுவிழா மட்டுமே நடைபெறுகிறது.

இதில், எந்தப்பணியும் முடிவடையவில்லை. ஆகவே, திமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதிநிலையை சரிசெய்ய உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.

ஆளும் கட்சி சார்பில் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் என்பதையோ மறந்து எடப்பாடி கே.பழனிசாமி ஏதேதோ பேசிவருகிறார்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது என்ன செய்தது என்று கோள்வி எழுப்பி வருகிறார். நாங்கள் செய்ததைத் சொன்னால் பட்டியல் போதாது. இருந்தாலும் நான் ஒரு சிலவற்றை சொல்கிறேன்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கியது. செல்லிடப்பேசியில் புரட்சி செய்து கட்டணமில்லா சேவையை உருவாக்கித் தந்தோம். இந்தியா முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம்.

அதே போல, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடியில் 4 வழிச்சாலை உள்ளிட்ட ஏராளமான கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக என்னென்ன திட்டங்களைக் கொண்டுவந்தது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் சரி, அதன் பிறகு எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு அறிவித்ததுடன் சரி.

இதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பாக மக்களை ஏமாற்ற அவசர அவசரமாக அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது.

ஆனால் தற்போது வரையில் அந்த இடத்தில் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கான எந்தப்பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்தப் பணிகள் முடிவடைய மேலும் 3 ஆண்டுகள் ஆகும். ஆகவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தப் பணிகள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.

கஜா, ஒக்கி புயல்களின்போது நிவாரணத் தொகையைப் பெறுவதற்குக் கூட முதல்வருக்கு தெம்பு இல்லை. அதேபோல், விலைவாசியும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஆகவே, திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே