தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கல்லூரி மாணவர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல்லில் போஸ்டரள் ஒட்டப்பட்டுள்ளன.

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வைத் தவிர அரியர் தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

அண்மையில், திருச்சியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர், தான் 23 பாடங்களில் அரியர் வைத்திருந்த நிலையில் முதல்வரின் உத்தரவால் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி முதல்வருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் நகர் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாணவர்களின் பாகுபலியே, அரியரை வென்ற அரசனே என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நகரின் பிரதானப் பகுதிகளில் அதிகளவில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரைப் பார்த்த மக்கள் பல்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்திக் கடந்து சென்றனர்.

இந்தப் போஸ்டரும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, “கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் இறுதித் தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகளில் மாணவர்கள் அரியர் வைத்திருந்து அதை இந்த ஆண்டு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்படும்.

மேலும் படித்து முடித்து எத்தனை ஆண்டுகள் கழித்து இருந்தாலும் அரியர் வைத்திருந்து அந்த தேர்வுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அந்த தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாவர்.

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிடும்” என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே