பொங்கல் பரிசு திட்டம் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..!!

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500, ஒரு கிலோ அரிசி, வெல்லம், முழு கரும்பு வழங்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, ஒரு முழு கரும்பு, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையொட்டி அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 2 கோடியே 10 லட்சத்து ஆயிரத்து 963 பேருக்கு தலா ரூ.2,500 நிதி உதவி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு துணிப்பை கொடுக்கப்பட உள்ளது.

மேற்கொண்ட பொருட்களை கொள்முதல் செய்யவும்,

தலா ரூ.2,500 ரொக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.5604.84 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்க உணவு பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் கோரிக்கையை ஏற்று அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அகதிகளுக்கு ரொக்கமாக ரூ.2,500 நிதியுதவி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5604.84 கோடி (ஐந்து ஆயிரத்து அறுநூற்று நான்கு கோடியே எண்பத்து நான்கு லட்சம் ரூபாய்) உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துணை ஆணையாளருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 9 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2500 வழங்கினார்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசு கடந்த இரண்டு வாரத்துக்கு முன் சர்க்கரை அட்டைதாரர்கள், அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

அதன்படி தற்போதுள்ள சுமார் 5 லட்சம் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களில் 3,75,235 பேர் அரிசி குடும்ப அட்டையாக மாற்றியுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

தமிழக அரசு வழங்கும் சலுகைகள் அரிசி குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதால், சர்க்கரை அட்டைதாரர்கள் அரசு அறிவித்த ஒரு வாரத்தில் சுமார் 4 லட்சம் பேர் அரிசி கார்டுக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே