காவல் துறையின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் – சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி கண்டனம்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் தந்தை ஜெயராஜ் (Jayaraj) மற்றும் மகன் பென்னிக்ஸின் (Fenix) மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான மனிதாபிமானமற்ற செயலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.

போலீஸ் கொடூரத்தை கண்டித்து, கொடூரமாக கொல்லப்பட்ட இருவருக்கும் நீதி வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கையுடன் ட்விட்டரில் #JusticeForJayarajAndFenix என்ற ஹெஷ்டேக் வைரலாகி வருகிறது.

ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாதான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில், அழைத்து சென்று கொடூரமாக தாக்கி, அடுத்த நாள் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் அங்கு அடுத்தடுத்து நாள் தந்தையும், மகனும் உயிரிழந்தனர். அவர்கள் உடல்நலம் குறைவின் காரணமாக இறந்தனர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதன்பிறகு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தார், காவல் துரையின் அறிக்கை தவறும் என்றும், அவர்களை காவல் துணை ஆய்வாளர்கள் சரமாரியாகக் கொடூரமாக தாக்கியதால், அவர்கள் இறந்தனர் என குற்றம்சாட்டினர்.

நீதி வேண்டும் என தர்ணா போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்பிறகே இரண்டு துணை ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், சாத்தான்குளம் (Sathankulam) சம்பவம் குறித்து முன்னாள் காங்கிரஸ் (Congress) கட்சி தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “போலீஸின் மிருகத்தனமான செயல். இது ஒரு கொடூரமான குற்றம். எங்கள் பாதுகாவலர்கள் ஒடுக்குமுறையாளர்களாக மாறும்போது, மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இறந்தவர்களுக்கு நீதி (#JusticeForJeyarajAndFenix) கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே