பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்தாவதற்கு காரணமான காவல்துறையினர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “குண்டர் சட்டத்தில் கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த தீர்ப்புகளை புறக்கணித்து – இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை எப்படியாவது தப்பவிடவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு, முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெறுகின்ற நேரத்தில், காவல்துறையும், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரும் காட்டியுள்ள அலட்சியமும் ஆர்வமின்மையும்; வழக்கு விசாரணையின் போக்கையே மாற்றும் ஆபத்தாக மாறியிருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.