கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா காலமானார்..; தலைவர்கள் இரங்கல்..!!

பிரபல கவிஞர், எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா காலமானதை அடுத்து அவருக்கு தமிழ் ஆர்வலர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் ஜெ. பிரான்சிஸ் கிருபா ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பு மட்டுமே பயின்றுள்ளார்.

கவிஞர் பிரான்சிஸ் கிருபா கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி எனும் நாவலுக்கு 2007-ஆம் ஆண்டு தமிழின் முன்னணி வார இதழ் ஒன்றில் சிறந்த புதினம் என்ற விருது கிடைத்தது. 2008-ஆம் ஆண்டு இவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தரராமசாமி விருது கிடைத்தது.

தமிழ் திரையுலகில் பாடலாசிரியராகவும் வலம் வந்தவர். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இதுமட்டுமின்றி, முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு படமான காமராஜ் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தையும் பிரான்சிஸ் கிருபாதான் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இன்று கவிஞர் பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் காலமானார். நெல்லை மாவட்டத்தில் அவர் சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் குறித்து ஒரு சிறிய நிகழ்வு குறிப்பு.. 2019-ஆம் ஆண்டில் ஒரு முறை, ஃப்ரான்சிஸ் கிருபா ஒருமுறை கோயம்பேட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அந்த இளைஞர் உயிரிழந்ததாலும், பிரான்சிஸ் கிருபா நீண்ட முடியுடன் மாறுபட்ட தோற்றத்தில் இருந்ததாலும் போலீசார் அவர்தான் கொலையாளி என்று சந்தேகித்து அவரை கைது செய்தனர். பின்னர், பிரேத பரிசோதனையின் அடிப்படையில் உயிரிழந்த வடமாநில இளைஞர் வலிப்பு ஏற்பட்டும், அதனால் மாரடைப்பு ஏற்பட்டதாலே உயிரிழந்ததாகவுமே கண்டறியப்பட்டது. அதன்பின்னரே பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே