இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஆடுவதை விட ஐபிஎல் தொடரில் ஆடுவது நல்ல தயாரிப்பு: ஷாகிப்-அல்-ஹசன் சர்ச்சைப் பேச்சு

புள்ளிகள் பட்டியலில் கடைசியில் இருக்கிறோம், எனவே இந்த 2 டெஸ்ட் போட்டிகளினால் பயனில்லை. ஒரு வித்தியாசமும் ஏற்படாது. மேலும் உலகக்கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் சாதிக்க வேண்டும், எனவே அதற்கு ஒரு தயாரிப்பாக ஐபிஎல் தொடரை நான் பார்க்கிறேன்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதில் எந்த விதப் பயனும் இல்லை, எனவே அதற்குப் பதிலாக ஐபிஎல் தொடரில் ஆடினால் உலகக்கோப்பை டி20-க்கு தயார் செய்வது போல் இருக்கும் என்று வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஆடுவது பணத்துக்காக, சுயநல விவகாரம், ஆனால் பேசுவதென்னவோ உலகக்கோப்பை தயாரிப்பு என்று வங்கதேசத்தில் கிரிக்கெட் வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரினால் இந்திய அணி புதுப் புது திறமைகளை வளர்த்தெடுக்கிறது என்றாலும் அயல்நாட்டு வீரர்களில் ஏற்கெனவே நன்கு நிறுவப்பட்ட வீரர்களை மட்டுமே ஏலத்தில் பெரிய தொகைகளுக்கு எடுப்பதால் இந்த வீரர்களின் ஆட்டமும் போய், இளம் திறமையும் அந்த நாடுகளுக்கு வளராமல் போகிறது என்ற விமர்சனங்கள் சில காலமாகவே எழுந்து வருகின்றன.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் புறக்கணித்து ஐபிஎல் தொடரில் ஆடுவேன் என்று ஷாகிப் கூறியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அவர் கூறியதாவது:

இலங்கைக்கு எதிரான இந்த 2 டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கடைசி போட்டிகளாகும், நாங்கள் எப்படியிருந்தாலும் தகுதி பெற முடியாது. எனவே நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடுவோம் என்பது போல் ஆட முடியாது.

புள்ளிகள் பட்டியலில் கடைசியில் இருக்கிறோம், எனவே இந்த 2 டெஸ்ட் போட்டிகளினால் பயனில்லை. ஒரு வித்தியாசமும் ஏற்படாது. மேலும் உலகக்கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் சாதிக்க வேண்டும், எனவே அதற்கு ஒரு தயாரிப்பாக ஐபிஎல் தொடரை நான் பார்க்கிறேன்.

இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றுமேயில்லை. எனவே பெரிய தொடருக்காக என்னை நான் ஐபிஎல் மூலம் தயார் செய்து கொள்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

நான் இந்த டெஸ்ட்களை துறப்பதால் இனி நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே முழுக்கு போடுவேன் என்று கூறுகின்றனர், இது தவறான பார்வை. டெஸ்ட் கிரிக்கெட் ஆடமாட்டேன் என்று நான் பிசிபிக்கு எழுதிய கடிதத்தில் எங்கும் குறிப்பிடவில்லை.

ஐபிஎல் ஆடும் மைதானங்களில்தான் உலகக்கோப்பையும் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் யாருக்கு எதிராக யாருடன் ஆடுகிறேனோ அதே வீரர்களைத்தான் நான் உலகக்கோப்பை டி20-யிலும் எதிர்கொள்ளப்போகிறேன்.

எனவே ஐபிஎல் ஆடுவதன் மூலம் பங்களாதேஷ் அணியில் வேறு யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஐபிஎல் விளையாடுவதன் மூலம் எனக்குத் தெரிந்ததை உலகக்கோப்பையின் போது நம் வீரர்களிடம் பகிர்வேன். எனவே ஐபிஎல் ஆடுவது சாதகம்தான்.

இவ்வாறு கூறினார் ஷாகிப் அல் ஹசன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே