கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அடுத்தடுத்து 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் பல தளர்வுகளுடன் 5ஆம் கட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
எனினும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை.
குறிப்பாக, நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகமாக பரவும் மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், 70 சதவீத பாதிப்பு சென்னையில் மட்டுமே உள்ளது.
இதனால், சென்னையில் மட்டும் ஊரடங்கை தீவிரப்படுத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்ற வழக்குகளுக்காக ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், சென்னை கொரோனா நிலவரம் குறித்து நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு கேள்வி எழுப்பியது.
சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா எனவும், அல்லது தற்போது உள்ள நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே தாங்களாக முன்வந்து கேள்வி எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக வழக்கறிஞர் கூறியதால், வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனால் இன்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவுள்ளது.