புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்!

புகைப்பழக்கம் அதிகம் உள்ள நபர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவிவருவதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளுக்கு அதிகமான காரணம் வயதானவர்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பிற நோய்களை கொண்டவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. மேலும் நோய் பரவும் விதங்கள் தொடர்பாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் கொரோனா தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவதோடு, இறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதை வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏனெனில் இருதய நோய், புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய நான்கு முக்கிய நோய்களுக்கு (என்.சி.டி) புகையிலை பயன்பாடு ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும், இவற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்படும்போது கடுமையான நோய்களை உருவாக்கி அதிக ஆபத்தான நிலைமையில் மக்களை வைக்கிறது. மேலும் புகைபிடிப்பதால், விரல்கள் மற்றும் அசுத்தமான சிகரெட்டுகள் உதடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளன, இது கையிலிருந்து வாய்க்கு வைரஸ் பரவும் வாய்ப்பை அதிகரிக்கிறது. வைரஸ் சமூக பரவலாக மாறவும் இது வழிவகை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிகழும் இறப்புகளில் 63 சதவீதம் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகையிலையிலுள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு வகையான நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டை அடக்குகின்றன, இது நுரையீரல் செயல்பாட்டைக் குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை உயர்வதையும் மட்டுப்படுத்துகிறது. இதனால் கொரோனா உள்ளிட்ட நோய்த்தொற்றின் போது நோய் எதிர்ப்பு சக்திகள் இல்லாமல் உயிரிழப்புகள் நிகழ்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான இறப்புகளில் அவர்களுக்கு புகையிலை உள்ளிட்ட பழக்கங்கள் மூலம் முன்பே இருக்கும் பிற நோய்கள் காரணம் என்பதை ஆராய்ச்சிகள் குறிப்பிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 398 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே