ஆய்வுக்கு சென்ற தமிழிசையிடம் புகாரளித்த மக்கள்..!!

ரேஷனில் அரிசி தாருங்கள் என, ஆய்வுக்கு சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் மக்கள் முறையிட்டனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நேற்று (பிப். 18) பதவியேற்றுக் கொண்ட தமிழிசை, முதல் நாளிலேயே கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, 2-வது நாளாக இன்று (பிப். 19) முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கிருந்து குழந்தைகளை தூக்கி கொஞ்சிய தமிழிசை, தினமும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

அங்கன்வாடியில் ஆய்வு செய்தபோது குழந்தைகளுக்கு பூ தரும் துணைநிலை ஆளுநர் தமிழிசை

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு சென்று ஆய்வு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். முதல் நாளில் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தினேன்.

குழந்தைகளின் ஊட்டச்சத்தில் எப்போதும் எனக்கு அக்கறை உண்டு. புதுவையில் 850 அங்கன்வாடிகள் உள்ளன. இதனால் அங்கன்வாடியில் ஆய்வு செய்தேன்.

குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

இதுபோல் மற்ற பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளுக்கும் செல்ல உள்ளேன்.

ஒவ்வொரு துறையாக பார்த்து, அதில் உள்ள குறைகளை சீர் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். எனது ஆளுமைக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ, அதனை செய்வேன்.

மக்களுக்கு ரேஷனில் அரிசி வழங்குவது பலனளிக்கிறதா அல்லது பணம் வழங்குவது பலனளிக்கிறதா என்று பார்த்துவிட்டு, எது பலனளிக்கிறதோ அது நிச்சயமாக செயல்படுத்தப்படும்.

இது தொடர்பாக விவாதிக்க குடிமை பொருள் வழங்கல் துறை செயலாளரை சந்திக்க உள்ளேன். மக்கள் பலன் பெறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் எனது கவனம் இருக்கும்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் பேருந்து வசதி கிடைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி வேண்டும், என்ன உதவி வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து, அதற்கான வழிமுறைகளை நிச்சயம் மேற்கொள்வேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஆளுநரை சூழ்ந்து கொண்டு, “ரேஷன் கடைகளை மூடியுள்ளனர். அரிசி போடுங்கள்.

எங்களுக்கு கஷ்டமாக உள்ளது” என்றனர். அதேபோல், இளைஞர்கள் சிலர், “வேலையில்லாமல் கஷ்டப்படுகிறோம், நடவடிக்கை எடுங்கள்” என்றனர்.

இவ்விஷயங்களை நிச்சயம் கவனிக்கிறேன் என்று அவர்களிடம் தமிழிசை உறுதி தந்தார்.

அங்கன்வாடி வெளியே கழிவுநீர் கால்வாய் மேற்பகுதி உடைந்த நிலையில் இருப்பதை அங்கிருந்தோர் சுட்டிக்காட்டியவுடன் அங்கு வந்து பார்த்து அதிகாரிகளை அழைத்து சரி செய்ய உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே