பதஞ்சலி நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்க அனுமதி எதையும் வழங்கவில்லை – உத்தராகண்ட் மாநில அரசு

சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள நிலையில், தாங்கள் பதஞ்சலி நிறுவனத்துக்கு மருந்து தயாரிக்க அனுமதி எதையும் வழங்கவில்லை என்று உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் மருந்து உற்பத்தி நிலையம் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

“நாங்கள் பதஞ்சலி நிறுவனத்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் மேம்பாடு, காய்ச்சல், சளி ஆகியவற்றுக்கான மருந்தை உற்பத்தி செய்யவே உரிமம் வழங்கினோம்;

அந்த உரிமத்தை வைத்து கோவிட்-19 தொற்றுக்கு எப்படி மருந்து உற்பத்தி செய்தீர்கள் என்று விளக்கம் கேட்கப்படும்,” என்று அந்த மாநில ஆயுர்வேத துறையின் உரிமம் வழங்கும் அலுவலர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம், செவ்வாயன்று, ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, இவை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது.

ஆனால், கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்துகள் என பதஞ்சலி வெளியிட்ட மருந்துகளுக்கு விளம்பரம் செய்ய ஆயுஷ் அமைச்சகம் நேற்று, செவ்வாய்க்கிழமை, தடை விதித்தது.

“கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் கூறியிருந்தது.

மேலும் உத்தராகண்ட் மாநில அரசிடம் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களின் நகல்கள், அனுமதி விவரங்கள் ஆகியவற்றையும் ஆயுஷ் அமைச்சகம் கோரியது.

அடுத்த இரு சில மணிநேரத்திலேயே பதஞ்சலி நிறுவனம் சார்பில் இது குறித்து பதில் தெரிவிக்கப்பட்டது.

தங்கள் மருந்து தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாகவும்; தகவல் தொடர்பு இடைவெளி தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்ய பாலகிருஷ்ணா ட்விட்டரில் தெரிவித்தார்.

“ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் இந்த மருந்து குறித்த மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டோம்.

இது கோவிட் -19க்கு முழுமையான தீர்வை அளிக்கும்,” என பிபிசியிடம் ஆச்சார்ய பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே